நடிகை கனகாவுக்கு திருமணமே ஆகவில்லை. மன அழுத்தம் காரணமாக, அவர் பொய் சொல்கிறார் என்று அவருடைய தந்தை தேவதாஸ் கூறினார்.
நடிகை கனகா, லாஸ் ஏஞ்சல்சில் மெக்கானிகல் என்ஜினீயராக இருந்த முத்துக்குமார் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணம் ஆன 15வது நாள் அவர் காணாமல் போய்விட்டதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென பேட்டி அளித்தார்.
முத்துக்குமாரும், அருள்குமாரும் ஒன்றாகப் படித்தவர்கள். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். அருள் குமார் மனைவி பெயர் ப்ரியா. நான் எங்க அம்மாவோட ஆவிக்கிட்ட பேசுவதற்காக ஆவி அமுதாவிடம் போனேன். அப்போ ஆவி அமுதா, ப்ரியாவை அறிமுகம் செய்து வைத்தார். ப்ரியா முத்துக்குமாரை அறிமுகம் செய்து வைத்தார்.
முத்துக்குமாரை திருமணம் செய்து கொள்கிறீகளா? அவருடைய நம்பரை வைத்துக்கொள்ளுங்கள் என்ற போன் நம்பரை கொடுத்தது ஆவி அமுதாதான். இப்போது முத்துக்குமாரையே தெரியாது என்கிறார் ஆவி அமுதா. என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார். நான் சம்மதிக்கவில்லை. அதனால், அவரும் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்.
தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும், தன் கணவர் காணாமல் போனதில் ஆவி அமுதாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இதுபற்றி கனகாவின் தந்தை தேவதாசை சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
கனகாவுக்கு பதிமூன்று வயதாகும்போது, நான் அவளுடைய தாயார் தேவிகாவை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர்களை நான் பார்க்கவே இல்லை. 18 வருடங்கள் கழித்து கனகாவை சந்தித்து பேசினேன்.
உனக்கு திருமண வயதாகி விட்டது. திருமணம் செய்துகொள் என்று கூறினேன். ஒரு பெண் தாய்மை அடைந்தால்தான் அவள் வாழ்க்கை முழுமை அடையும். நீ தாயானால்தான் நான் தாத்தா ஆக முடியும் என்றெல்லாம் பேசியபின், திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதித்தாள். நீங்களே மாப்பிள்ளை பாருங்கள் என்றாள்.
இது, நடந்தது 2008ம் ஆண்டு. ஆனால், 2007ம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக இப்போது கூறுகிறாள். திருமண ஆல்பம் எங்கே? என்று கேட்டால், இதுதான் என்று ஒரு கிழிந்த பேப்பரை காட்டுகிறாள். அதில், உருவமே தெரியவில்லை.
கனகா, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாள். ஒரு தந்தை என்ற முறையில் அவள் மீது அனுதாபப்பட்டு, நீ என்னுடன் வந்துவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உடனே, எங்க அம்மா மரணத்துக்கு நீதான் காரணம் என்று வெறிபிடித்தவள் போல் பேசுகிறாள். என்னை அவள் பேசவே விடவில்லை. அவள் பேசியதை எல்லாம் டேப் செய்து வைத்திருக்கிறேன்.
2007 ம் ஆண்டு திருமணம் நடந்திருப்பதாக கனகா கூறுகிறாள். அதில் ஒருவேளை உண்மை இருக்குமோ என்று ஒவ்வொரு திருமண பதிவு அலுவலகமாக சென்று ஆதாரங்களை தேடினேன்.
எந்த பதிவு அலுவலகத்திலும் கனகா திருமணம் செய்துகொண்டதற்கான ஆதாரம் இல்லை. கற்பனையாக ஒரு கணவரை உருவாக்கிக்கொண்டு, மன அழுத்தம் காரணமாக கனகா பொய் சொல்கிறாள். என் மகளுக்கு என்ன ஆகுமோ என்று நினைக்கும்போது பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது.
தேவிகாவுடன்தான் எனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. என் மகளையாவது அழைத்து வந்து வாழ வைக்கலாம் என்று நினைத்தால், கனகா என் வீட்டுக்கு வர மறுக்கிறாள் என்றார் தேவதாஸ்.